1990களில் நான் BetzDearborn கம்பெனியில் பணிபுரிந்த கொண்டிருந்தபோது Tony Askew நிர்வாக மேலாளராக இருந்தார் (MD). சற்று கசப்பான நகைச்சுவைக்கு பெயர் போனவர். இங்கிலாந்தில் பிறந்தவர் என்றாலும் அமெரிக்காவில் பல வருடங்கள் வசித்தவர். அதனால்தான் சற்று மெலிதான பிரிட்டிஷ் நகைசுவையை அவரிடம் பார்க்க முடியவில்லை என நினைக்கிறேன். இந்தியாவில் சில காலம் அவர் பணிபுரிந்த காலத்தில் அவரிடம் பல விஷயங்களை கற்றுக் கொண்டோம்.

ஒரு நாள் காலையில் அவரது அலுவலகத்தில் நுழைந்தபோது, “ரமேஷ், இந்த bollywood (ஹிந்தி) நடிகைகள் எல்லாம் நிமோனியா பிடித்து இறப்பார்கள் என நினைக்கிறேன். ஏன் தெரியுமா?” என்று கேட்டார். ஒரு கணம் எனக்கு தூக்கிவாரி போட்டாலும் சமாளித்திக் கொண்டு, “என்னால் யூகிக்க முடியவில்லை!” என்றேன். உடனே அவர், “நான் எப்போது பார்த்தாலும் அவர்கள் ஈரமான உடையில், மழையில் நனைந்து கொண்டு மரத்தை சுற்றி நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள். அதனாலதான்” என்றார்.

நிமோனியாவை விடுங்கள், இந்த மாதிரி நனைந்து, dance ஆடியதால் எந்த நடிகைக்கும் குளிர் ஜுரம் கூட வந்ததாக தெரியவில்லை. ஆனால் Tony என்ன சொல்ல நினைத்தார் என்பது புரிந்திருக்கும்.

இந்தியர்கள் எல்லாரும் சினிமா பாடல்களைக் கேட்டு வளர்ந்தவர்கள். மேலை நாடுகளைப் போல் தனியாக பாட்டுப் பாடி பிரபலமான beetles அல்லது abbaவோ மைக்கேல் ஜாக்சனோ அல்லது Briteny Spearsஐயோ இங்கே காண முடியாது. நமது சாஸ்த்ரிய சங்கீதத்தில் பிரபலமான பாடகர்களை விட்டு விட்டால் சினிமா மூலம் நாம் அறிந்த பாடகர்கள் அநேகம். லதா மங்கேஸ்கர் 30,000 பாடல்களுக்கு மேல் கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாய் பாடியுள்ளார்.

சாட்டலைட் டெலிவிஷன் இந்தியாவில் அறிமுகமான பின் நாம் சிறு வயதில் கேட்ட அத்தனை பாடல்களும் பல நூறு முறை தினமும் டிவியில் ஒளிபரப்பப் பட்டது, படுகிறது. இந்த பிரபலமான பாடல்களில் நடித்து, ஈர உடையில் நனைந்து, நடனமாடிய நடிகைகள் நாம் பார்க்க முடிந்தது. OK, நனைந்தது என்பது கொஞ்சம் exaggerate பண்ணப்பட்ட விஷயம்.

இந்த வகையில் நான் பார்த்த பல பாடல்களில் இரண்டு என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு பாடல், வைஜயந்திமாலாவின் நடனத்திற்க்காக, மற்றொன்று சாவித்ரியின் நடிப்புக்காக.

சங்கம் திரைப்படம் ராஜ் கபூரால் டைரக்ட் செய்யப்பட்டு 1964ல் வெளியான ஹிந்தி படம். அதில் அவர் ஹீரோவாக நடித்தும் இருப்பர். ராஜ் கபூர் இந்திய சினிமாவின் மிகக் சிறந்த ஷோ மேன் என்று அழைக்கப்பட்டவர். வைஜயந்திமாலா அந்த சமயத்திலேயே ஹிந்தி சினிமாவின் top ஹீரோயினாக இருந்தவர். அந்த காலகட்டத்தில் ‘item number’ எனப்படும் சற்று வெளிப்படையான பாடல்களில் கவர்ச்சி நடிகைகள் மட்டுமே நடனமாடுவார்கள். இந்த jinxஐ இந்த பாடலின் நடனத்தில் வைஜயந்திமாலா தகர்த்தார். லதா மங்கேஷ்கரும் இந்த பாடலை ‘கொஞ்சம் செக்ஸியாக இருக்கிறது’ என்று முதலில் பாட மறுத்து விட்டார். ராஜ் கபூர் அவரை கெஞ்சி சம்மதிக்க வைத்துள்ளார். ‘Main Kya Karoon Ram, Muje Buddha Mil Gaya – நான் என்ன செய்யட்டும் கடவுளே – எனக்கு ஒரு கிழவன் கிடைத்துள்ளான்’ என்ற அந்த பாடலில், கணவனை கிண்டல் செய்து அவர் ஆடும் கவர்ச்சியான நடனம் அற்புதமாக படமாக்கப் பட்டிருக்கும்.

கதாநாயகி, தயாள குணத்தையும் ஒழுக்கத்தையும் மொத்தமாய் குத்தகைக்கு எடுத்தவார்களாக சித்திரிக்கப்பட்ட காலத்தில், கணவனை நோக்கி,

“எல்லோரும் பார்க்குக்கு போய் பூ வாங்கி வந்தார்கள்,
என் கணவனும் வாங்கி வந்தான் ஒரு cauliflowerஐ

என் கணவன் ஒரு கிழவன் அவன் தலைமுடி
நரைத்து என் தாத்தாவை போல் இருக்கிறான்
என்ன சோதனை எனக்கு?” என்று பாட்டெழுதி படமாக்க நிரம்ப தைரியம் இருந்திருக்க வேண்டும்.

இந்த பாடலில் என்னைக் கவர்ந்த மற்றொரு விஷயம் – பாடல் முழுவதும் ராஜ் கபூர் ஒரு பாட்டில் ‘milk of magnesia’ குடித்தவர் போல் ஒரு நாற்காலியில் உட்க்கார்ந்து கொண்டு வைஜயந்திமாலா ஆடும் நடனத்தை வெறுப்புடனும் கோபத்துடமும் பார்த்துக் கொண்டிருப்பார்.

கடைசியில் ஸ்டூல் மீதேறி வைஜெயந்திமாலா ஆடும் நடனம் மெய்சிலிர்க்க வைக்கும். இதோ அந்த பாடல்.

அடுத்த பாடலில் இந்த விஷயம் எதுவுமில்லை. அனால் இரண்டு காரணங்களுக்காக மிகவும் என்னைக் கவர்ந்த பாடல். பாடலின் மென்மை மற்றும் சாவித்ரியின் நடிப்பு. ஒரு பாடலில், அதுவும் முருகன் மீது பாடம் பக்தி பாடலில் எத்தனை முக பாவங்களை காட்ட முடியும்? முடியும் என்று காட்டியிருப்பார் சாவித்ரி.

‘சிங்கார வேலனே தேவா’ 1962ல் வெளியான கொஞ்சும் சலங்கை படத்தில் வந்த பாடல். S ஜானகிக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்த பாடல். ஆபேரி ராகத்தில் அமைக்கப்பட்ட பாடல். கர்நாடக சங்கீதத்தில் பயிற்ச்சி பெறாத ஜானகி, இந்த பாடலை அற்புதமாக பாடியிருப்பார். அவரது மென்மையான குரலுக்காகவும் சாவித்ரியின் நடிப்புக்காகவும் இன்றளவும் லட்சக்கணக்கான ரசிகர்கள் ரசிக்கும் பாடல்.

கோவிலில் சந்தனம் அரைத்துக் கொண்டிருக்கும் சாவித்ரி, ‘சிங்கார வேலனே தேவா என்ற வரியை பாடிக்கொண்டிருப்பார். திடிரென்று அந்த வரி நாதஸ்வரத்தில் கேட்கும். சற்று நாணமடையும் சாவித்ரி அங்கிருந்து ஓடி ஒளிந்து கொள்வார். ஓடிய சாவித்ரியை தேடிக் கண்டுபிடித்து, “ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய் சாந்தா?” என்று கேட்பார் ஜெமினி. “என் பாடல் உங்கள் நாதஸ்வரத்திற்கு முன்னால்?” என்று சாவித்ரி பதில் கூற “தேனோடு கலந்த தெள்ளமுது, கோல நிலவோடு சேர்ந்த குளிர் தென்றல்” என்று கூறி அவரைப் பாடச் சொல்வார் ஜெமினி.

முதலில் தயங்கி மெதுவாக பாட ஆரம்பிப்பார் சாவித்ரி. அவர் ஒரு வரியைப் பாட, அதை நாதஸ்வரத்தில் வாசிப்பார் ஜெமினி. சாவித்ரி இரண்டு வரிகளுக்கப்புறம் பாடலில் மெய்மறந்து பாட்டை தொடர்வார். ஜெமினி அதை நாதஸ்வரத்தில் வாசிப்பதையும் பார்ப்பார்.

முதலில் நான் அவருக்கு ஈடில்லை என நினைக்கும் சாவித்திரி, இரன்டு வரிகளுக்கு பிறகு தானும் மோசமில்லை என்பதை புரிந்து கொள்வார். ஜெமினி வாசிப்பதை ரசிப்பார். ஒரு கடினமான ஆலாபனையை அவர் வாசிக்கும்போது கண்ணசைப்பால் பாராட்டுவார். பிறகு மேலும் கடினமான ஆலாபனையை பாடி அவரை challenge செய்யவர். அதை அவர் வாசித்து முடிக்கும்போது அவர் புருவங்கள் ஆச்சர்யத்தில் உயரும். இந்த மெலடி (melody) முடியும் வரை அவர்கள் பேச மாட்டார்கள். சாவித்ரியின் கண்களும் முகபாவம் மட்டுமே. பாடிக்கொண்டிருக்கும் போது அவர் கண்கள் ஜெமினி மீதே இருக்கும். பாடிக்கொண்டே அவர் எழுந்து, எரியும் விளக்கின் திரியை சரிசெய்ய செல்வார். அப்போதும் அவர் பார்வை ஜெமினியை விட்டு நீங்காது. அவர் பாடலை பாடவில்லை, lip-sync மட்டுமே செய்கிறார் என்று நீங்கள் நினைக்க கூட மாட்டிர்கள். அற்புதமான நடிப்பு. முருகனைப் பற்றிய பக்தி பாடல் என்றாலும், பாடல் முழுவதும் ஒரு மெல்லிய சிருங்காரம் இருக்கும். சிங்கார வேலன் – முருகன் என்றாலும், அது ஜெமினியையும் குறிப்பிடுவதாக அமைந்திருக்கும்.

இந்த பாடல் பதிவாக்கம் செய்யப்பட்டதும் ஒரு ஆச்சர்யம்தான். மும்பையில் ஜானகி பாடுவதை ஒலிப்பதிவு செய்தபோது, நாதஸ்வர இசையை ஒலிப்பதிவு செய்யமுடியவில்லை. நாதஸ்வரம் வாசித்த மிகப் பிரபலமான காரைக்குறிச்சி அருணாச்சலம், உடல்நலக் குறைவால் மும்பை வர முடியாது என்று மறுத்துவிட்டார். பிறகு, பாடலை மும்பையிலும், நாதஸ்வரத்தை சென்னையிலும் ஒலிப்பதிவு செய்து mix செய்த்திருக்கிறார்கள். Technology அந்த அளவு வளர்ந்திராத காலத்தில் எப்படி இவ்வளவு அற்புதமாக இதை உருவாக்கினார்களோ? Subbiah Naidu ஒரு ஜீனியஸ்தான். Mr. DBS ஜெயராஜ் இந்த பாடலைப் பற்றி ஒரு அற்புதமான blog எழுதியிருக்கிறார். சிங்கார வேலனே தேவா

மூன்றரை மணி நேரம் மூக்கைச் சிந்தி அழும் இந்த tear-jerkar படங்களை, சொகுசாய் வீட்டின் வரவேற்பறையில் உட்கார்ந்து கொண்டு, ரிமோட் பட்டனை, தொடர்ந்து அழுத்திக்கொண்டு கூட பார்க்கும் பொறுமை நம்மில் அநேக பேருக்கு இருக்காது. ஆனால் இந்த அற்புதமான பாடல்கள் இந்திய சினிமாவின் பொற்காலத்திற்கு நம்மை கொண்டு செல்லும்.

4 responses to “இரண்டு இனிய பாடல்கள்”

  1. Very deep analysis of the song Singaravelan, nice to read, share some
    more things like this to make Sundays delighted.

    Like

    1. Thanks Sir. Yes it is one of my favourite song.

      Like

      1. And thanks for the encouraging comments as well

        Like

  2. முதல் பாடலை பற்றி எனக்கு தெரியாது இப்போது வீடியோ பார்த்தால் வைஜயந்தி சரியாக சொன்ன மாதிரி தான் உள்ளது,ராஜ்கபூர் வயதானவராக தெரிகிறார் 😁

    சிங்கார வேலன் பாடல் கேட்டு அவர்கள் காதலர்களாக இருப்பார்கள் என நினைத்து கொஞ்சும் சலங்கை படத்தை பார்த்தால்,அந்த பாடலில் மட்டுமே ஜெமினியும்,சாவித்திரியும் சந்தித்துக் கொள்வார்கள் 😇 எனக்கு ஏமாற்றமாக இருந்தது

    ஜானகியின் குரல் சற்று கீச்சு குரலாக இருப்பதால் சாவித்திரிக்கு பிடிக்காதாம்,தனக்கு பின்னணி பாடுவதற்கு ஜானகியை விரும்ப மாட்டாராம்,ஆனால் இந்த பாடலை சிறப்பாக பாடுவதற்கு ஜானகியே சரியானவர் என்று பலரும் சொன்னதால் KVM ஜானகியை அனுகி உள்ளார்,அந்தம்மாவுக்கு நான் பாடினால் பிடிக்காதே என்றாராம் ஜானகி,அவரை சமாதானப்படுத்தி பாட வைத்தார்களாம் 😊

    நமக்கு ஒரு மிகச்சிறந்த பாடல் கிடைத்தது,பார்ப்பதற்கும்,கேட்பதற்கும் அருமையாக இருக்கும் ஒரு சில பாடல்களில் இதுவும் ஒன்று

    சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 ஃபைனலில் அல்கா இந்த கஷ்டமான பாடலை இறுதிப்போட்டியில் மிகச்சிறப்பாக பாடினார்

    ப்ளாக் எழுதும் போது மட்டும் தமிழ் நன்றாக எழுதுவாய் போல 😁👏🏽👏🏽👏🏽

    Like

Leave a comment