1970களில் நாங்கள் மதராசுக்கு குடியேறியதைப்பற்றியும், வெங்கடேஷும், சிவாஜியும் எப்படி நண்பர்களானார்கள் என்பதைப் பற்றியும் முந்தைய சில பதிவுகளில் குறிப்பிட்ருந்தேன். நாங்கள் ஒரே குடியிருப்பில் (postal colony) வசித்துவந்தோம் மற்றும் ஒரே வகுப்பில் பயின்று வந்தோம் (VII A). VII A Vs VII C – My First Cricket Match
பெரிய நகரத்திற்க்கு வந்த சந்தோஷம் வெகு நாளைக்கு நிலைக்கவில்லை. பழைய பதிவில் சொன்னனது போல் அஞ்சுகம் பள்ளி, ‘நல்ல பள்ளி – கண்டிப்பு நிறைந்த பள்ளி’ – என்று பேர் வாங்கியிருந்தது. அதைக் காப்பாற்ற ப்ரின்சிபால் கிதாரணி ஆறு வாரத்திற்கு ஒரு முறை test அல்லது exam என்று மாணவர்களை சோதித்துக் கொண்டிருந்தார். Pass, Gate Pass and Naa Pass
பள்ளியில் சேர்ந்த முதல் ஆறு வாரத்தில் எங்கள் முதல் பரீட்சை ஆரம்பித்தது. கிராமத்தில் பயின்ற வரை நாங்கள் எப்போதுமே வகுப்பில் முதலாவதாக வருவோம். ஆனால் சென்னையில், முதல் நாள் முதல் வினாத்தாளை பார்த்தவுடனே, இது வேறு ஒரு உலகம் என்பது புரிந்தது. பாஸ் மார்க்குக்கு கொஞ்சம் அதிகமாக வாங்கி நான் தப்பித்தேன். எனது அக்காவிற்கும், ஜெ கேவிற்கும் இடையில் யார் மிக மோசமாக மார்க் வாங்கினார்கள் என்று நினைவில்லை.
தொண்ணுறு மார்க்குக்கு குறைவாக எப்போதுமே வாங்காத எங்களுக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. மோகன் ராமும், வெங்கடேசுஷும், சிவாஜியும் கிட்ட தட்ட நல்ல மதிப்பெண்கள் வாங்கியிருந்தார்கள். ரிப்போர்ட் கார்டை பார்த்த எங்கள் அம்மா, “பரவாயில்லை. புது இடம். பெரிய பள்ளி. பழகியவுடன் நல்ல மார்க் மீண்டும் வரும்.” என்றார். நம்பிக்கை ஊட்டுவதற்காக சொன்னாரா இல்லை ஒரு எதிர்பாரார்ப்பில் சொன்னாரா என்று தெரியவில்லை. ஆனால் அப்பாவிற்க்கு அவ்வளவு நம்பிக்கையில்லை. “ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை. மெட்ராஸில் கஷ்டம்” என்கிறார்.
அஞ்சுகம் பள்ளியில் எங்களை ஊக்குவிக்க இன்னொரு உபாயமும் வைத்திருந்தார்கள். எழுபது மார்க்குக்கு மேல் வாங்கினால் சிகப்பு கலரில் மார்க்குக்கு பக்கத்தில், ரிப்போர்ட் கார்டில் ஒரு ஸ்டார் வைப்பார்கள். யாருக்கு எத்தனை ஸ்டார் என்பதில் ஒரு போட்டி. அடுத்த தேர்வில் எப்படியாவது ஒரு ஸ்டாராவது வாங்க வேண்டும் என்று நினைத்தேன். வாங்குவதற்கான ரகசியத்தையும் கண்டு பிடித்தேன். அம்மன் கோவிலின் அருள்தான் அது.
பரீட்சைக்கு முதல் நாள் வெங்கடேஷும் சிவாஜியும் அருகிலுள்ள கருமாரி அம்மன் கோவிலுக்கு போவார்கள். star அதுவம் கணக்கில் ஸ்டார் வாங்குவதற்காக வெங்கடேஷ் அடிபிரதட்சிணம் செய்வான். நானும் அதைக் காப்பி அடித்தேன். கோவில் சிறிதாக இருந்ததால் தப்பித்தோம். இருப்பது நிமிடங்களில் மூணு முறை சுற்றி விடலாம்.
அடுத்த பரிட்சையில் எனது மார்க்கில் முன்னேற்றம் இருந்தாலும் வெங்கடேஷுக்கு பக்கத்தில் கூட போக முடியவில்லை. சில பரிட்சைகளும் கோவில் சுற்றுகளும் முடித்த பிறகுதான் அவன் ஏன் அவ்வளவு மார்க் வாங்குகிறான் என்று புரிந்தது. சுருக்கமாக சொன்னால் அவன் கணக்கில் அதி புத்திசாலி.
ஒரு நாள் கோவிலுக்கு போகும்போது சில மனக்கணக்குகளை போட்டுக்கொண்டிருந்தோம். எப்போதும் போல வெங்கடேஷ் மற்றவர்களை விட வேகமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தான். அவனை மடக்க நினைத்து “உன்னால் மூணு இலக்க எண்களை பெருக்க முடியுமா என்று கேட்டேன்.” “முயற்சிக்கிறேன்” என்றான். “389 X 476 எத்தனை? என்று கேட்டேன். சில நிமிஷங்கள் மௌனமாக இருந்தான். ‘செத்தாண்டா சேகர்’ என்று நினைத்தேன். கோவில் நெருங்கியவுடன், “ஒரு லட்சத்து எண்பத்தைந்தாயிரத்து நூற்று அறுபத்தி நாலு” என்றான். “என்ன?” என்று கேட்டதும் “உன் கணக்குக்கு விடை” என்றான். போனும் கால்குலேட்டரும் இல்லாத காலம். வீட்டிற்கு வந்து பேப்பரும் பேனாவும் எடுத்து பெருக்கி பார்த்தால் விடை சரி என்பது புரிந்தது.
1977ல் வெங்கடேஷ் வேறு இடத்திற்கு வீடு மாற்றி சென்றவுடன் கருமாரி அம்மன் கோவிலுக்கு போவது நின்றுவிட்டது. கிரிக்கெட் டீமில் காலேஜ் போகும் சீனியர்கள், வெள்ளிக்கிழமை விளக்கு பூஜை செய்ய வரும் பெண்களை அருகிலிருந்து பார்க்க, முடிந்தால் ஓரிரு வார்த்தை பேச அம்மன் கோவிலுக்கு போவார்கள். சென்னை கன்சர்வேட்டிவ் நகரமாக இருந்த காலம் அது.
நாற்பதாண்டுகள் கழித்து இன்று அந்த கோவிலை சென்று பார்த்தேன். இந்தியாவின் மற்ற அத்தனை இடங்களைப் போல கோவிலும் மாறியிருந்தது.

ஒன்பதாம் வகுப்பில் நாள் முழுவதும் வகுப்பறையில் நாங்கள் நால்வரும் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று வெங்கடேஷையும் சிவாஜியையும் IX C செக்சனுக்கும் மோகன் ராமையும் என்னையும் IX A செக்சனுக்கும் மாற்றிவிட்டார்கள். காம்பெடிஷன் குறைந்ததால் நான் சற்று முன்னேறி மோகன் ராமுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தேன்.
கோவில் ஜுரம் பள்ளியிறுதியில் எங்களை மறுபடியும் தாக்கியது. ஒரு நாள் சீனிவாசா தியேட்டரில் நூன் ஷோ பார்த்துவிட்டு நானும் சிவாஜியும் வந்து கொண்டிருந்தபோது, ஆதி கேசவப் பெருமாள் கோவில் கண்ணில் பட்டது. தெய்வீகமான கோவில். ஒரு நொடியில் எங்களைக் கவர்ந்தது. பரிட்ச்சை முடியும் வரை தினமும் போகலாம் என்று தீர்மானித்தோம்.

பொதுவாகவே எனக்கு பெருமாள் கோவில் போகப் பிடிக்கும். துளசி போட்டு தரும் தீர்த்தம் தெய்விகமானது. பிரசாதத்தில் கொடுக்கப்படும் புளியோதரையும் சர்க்கரைப் பொங்கலும் வேறு எங்குமே கிடைக்காது. அமிர்தமாக இருக்கும்.
கருமாரி அம்மன் கோவில் சமீபத்தில் (1970களில்) கட்டப்பட்டது. ஆதி கேசவ பெருமாள் கோவில் ஆயிரம் ஆண்டு பழமையானது. ஸ்ரீ ராமானுஜர் இந்த கோவிலில் தங்கி வழிபட்டிருக்கிறார். நாங்கள் சென்ற அந்த கால கட்டத்தில் அங்கு நிறைய பக்தர்கள் வர மாட்டார்கள். நானும் சிவாஜியும் கோவிலுக்குள் உட்கார்ந்து மாணிக் கணக்கில் பேசிக்கொண்டிருப்போம்.
வேண்டிக் கொண்டபடி பரீட்சை வரைக்கும் தினமும் கோவிலுக்கு போனோம். படிப்பும், பெருமாள் அருளும் சேர்ந்து பத்தாவதில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பாஸ் பண்ணினோம்.
பல வருடங்கள் கழித்து நானும் ஜெ கேவும், bike பயணத்தின் போது பேளூர் கோவிலுக்கு சென்றோம். Romancing the RX-100 – A Southern Odyssey -1993. Part -1. பிரம்மாண்டமான அந்த கோவிலில், இரவில் ஒரு திண்ணையில் உட்கார்ந்திருந்தபோது, சென்னை பெருமாள் கோவில் நியாபகம் வந்தது. ஒரு தெய்விக சக்தி நம்மை அணைப்பதை உணர முடிந்தது. இரண்டுமே கேசவ பெருமாள் கோவில்தான். ஒன்று பத்தாவது பாஸ் பண்ணுவதற்கும் மற்றொன்று நீண்ட மோட்டார் சைக்கிள் பயணத்தின் போதும் அருள் புரிந்தது.
சில மாதங்களுக்கு முன், பல வருடங்கள் என்னுடன் பணிபுரிந்த நண்பர்ககளுடன் பேசிக்கொண்டிருந்தேன். “சார் நீங்க englishல போடற blog எல்லாம் பாக்குறோம். படிக்கறதில்லை. ஆனால் தமிழில் எழுதியதை உடனே படிக்கிறோம்” என்றார்கள். சரி இரண்டிலுமே எழுதலாம் என்று நினைத்தேன். தமிழில் எழுதி ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கலாம் என்று நினைத்தேன். முடியவில்லை. ஆங்கிலத்தில் நினைக்கவும், கோர்வையாக எழுதவும் முடிகிறது. பிறகு ஆங்கிலத்தில் எழுதி தமிழில் மொழியாக்கம் செய்தேன். பல ஆண்டுகளாக ஆங்கிலத்தில் நினைத்து, பேசி, எழுதிவந்ததால் ஏற்பட்ட வினை.
இனிமேல் தமிழில் அதிகமாக எழுதவும் . மிகவும் அருமை . ரொம்ப பெருமையாகவும் இருக்கிறது
LikeLike
மிகவும் அழகாக ௭ழுதியிருக்கிராய். தமிழில் படிப்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நல்ல முயற்சி.
LikeLike
Hope you are all doing graet
LikeLike
Very interesting. Bringing back old memories to me.
LikeLike
Awesome, Ramesh
LikeLike
Beautifully written, both in English and Tamil. Superb !
LikeLike
Super Writing in both Tamil and English Ramesh . 👏👏👏🎉👍👍
LikeLike
இந்த அனுபவங்களையாவது தமிழில் தொடர்ந்து எழுதுங்கள்.
LikeLike